பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு: இயக்குநர் அமீர்

பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் தமிழ் தயாளன் இயக்கியுள்ள படம் ‘கெவி’. இப்படம் உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், ஆதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் அதில் அமீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமீர் பாலியல் வன்கொடுமைகள் பற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது ஏற்க முடியாதது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த ஒரு விஷயத்தில்தான் வளைகுடா மற்றும் அரபுநாடுகளைப் போல சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். மரண தண்டனைதான் இதற்கான சரியான தீர்வு. இங்கே உடனே சமூக ஆர்வலர்கள், மனிதநேய காவலர்கள் வருவார்கள். மரண தண்டனையை ரத்து செய்யுங்கள் என்பார்கள். இந்த மாதிரியான குற்றத்திற்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு ரவுடியை என்கவுண்டர் செய்துவிட்டு குற்றத்தை கட்டுப்படுத்திவிட்டதாக போலீசார் சொல்கின்றனர். ஆனால் அதற்கு பின்பு அடுத்தடுத்து வெவ்வேறு ஊர்களில் கொலை நடக்கிறது. அப்படியென்றால் அவர்களுக்கு பயமே வரவில்லை என்றுதானே அர்த்தம். அதுபோல கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அம்மாநில முதல்வரே தலையிட்டு வருகிறார். இந்த செய்திகளைப் பார்த்துக்கொண்டே வேறோரு இடத்தில் பாலியல் வன்கொடுமையை செய்பவன் மனநோயாளிதான். அவனை எப்படி விட்டு வைப்பது? கடுமையான தண்டனைதான் இதற்கான தீர்வு. இவ்வாறு அவர் கூறினார்.