‘காஞ்சனா 4’ படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
‘காஞ்சனா’ வரிசை படங்களை இயக்கி, தயாரித்து தொடர்ச்சியாக வெற்றியும் பெற்று வருபவர் லாரன்ஸ். தற்போது இதர இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்தாலும், ‘காஞ்சனா 4’ படத்தின் கதையையும் எழுதி வந்தார். இப்போதுள்ள சூழலுக்கு ஏற்றவகையில் பிரம்மாண்ட தயாரிப்பு செலவு வரும் வகையில் எழுதியிருக்கிறார்.
இந்தக் கதையை கேட்டுவிட்டு, பல தயாரிப்பாளர்கள் தயாரிப்பு செலவைக் கேட்டு தயக்கம் காட்டினார்கள். இறுதியாக கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக, சத்யஜோதி நிறுவனம் – கோல்டு மைன்ஸ் நிறுவனம் இணைந்துதான் லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ஹண்டர்’ படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ‘காஞ்சனா’ படங்கள் போலவே, இந்தப் பாகத்தையும் ஜனரஞ்சகமாக எழுதியிருக்கிறார் லாரன்ஸ். இதில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர் தேதிகள் கொடுப்பதை முன்வைத்து இதர நடிகர்கள் ஒப்பந்தத்தை முடித்து படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்திருக்கிறார் லாரன்ஸ்.
தமிழ் படங்கள் பலவற்றை இந்தியில் டப்பிங் செய்து யூடியூப், இந்தி தொலைக்காட்சியில் உள்ளிட்டவற்றில் வெளியிட்டு வரும் நிறுவனம்தான் கோல்டு மைன்ஸ். தற்போது பெரிய முதலீட்டில் தமிழ் படங்களை தொடர்ச்சியாக தயாரிக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.