“தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களைக் காப்பாற்றிய ஒரு ஹீலர். தேவையில்லாமல் என்னையும், கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம்” என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘ப்ரதர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி கூறியதாவது:-
இந்த விஷயத்தில் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு.. வாழ விடு. யாரையும் இதில் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயர்களை சொல்கிறார்கள். அப்படி செய்யாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர். எதிர்காலத்தில் நானும், கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் தொடங்கி பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் என்னையும், கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்தார். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், திருமணப் பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்த முடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியிருந்தார். இதற்கிடையே, ஜெயம் ரவி மனைவியைப் பிரிந்ததற்கு பாடகி ஒருவர்தான் காரணம் என்று செய்திகள் வெளியானது.
இதையடுத்து, “கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து முடிவில் இருந்தேன். தனிப்பட்டமுறையில் இது எனக்கு வேதனைதான். இரண்டு முறை இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதற்குப் பின் அவரின் அப்பா பேசினார். என் வீட்டிலும் பேசினார்கள். இவ்வளவு நடந்த பிறகும் தனக்குத் தெரியாமல் எடுத்த முடிவு அது என்று அவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. என் மூத்த மகனிடம் இது குறித்து பேசியிருக்கிறேன். அவனுக்கு என்ன புரியுமோ அப்படி சொல்லி இருக்கிறேன். அவன், அனைத்து குழந்தைகளையும் போல, இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான். இரண்டு மகன்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள். என் பெற்றோர் என் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். என் மகிழ்ச்சிதான் அவர்களுக்கு முக்கியம். இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசு கிசுவும் வராமல் இருந்தவன் நான். என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது. அந்தப் பெண், ஆதரவற்ற பெண். அவர் பலருக்கு உதவி வருகிறார். அவரும் நானும் இணைந்து ஆன்மிக மையம் ஒன்றை அமைக்க இருந்தோம். இன்னொரு பெண்ணை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது. இது தொடர்பாக அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும்” என்றது குறிப்பிடத்தக்கது.