தமிழ்நாட்டில் இப்போதும் அவலங்கள் நடக்கிறது: திருமாவளவன்!

இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் நந்தன். படத்தில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். படம் பார்த்த பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், படம் பார்த்த விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

படம் ரிலீஸுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், படத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் அரசு அலுவகலத்தில் வைத்திருப்பதைப் போல காண்பிக்கப்படுகின்றதே என, கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ரா. சரவணன், “நான் பொய் சொல்லவில்லை. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தேதியில் நான் 2024ஆம் ஆண்டைத்தான் காட்சிப் படுத்தியுள்ளேன். 2024ஆம் ஆண்டினை படத்தில் காட்டிவிட்டு வேறு ஒருவரை முதலமைச்சராக என்னால் காட்ட முடியாது. இப்போதும் சாதிய கொடுமைகள் நடைபெறுகின்றது. முதலமைசர் ஸ்டாலின் ஆட்சியிலும் சாதிய கொடுமைகள் நடைபெறுகின்றது. இந்தப் பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை வேறு உள்நோக்கத்துடன் படத்தில் காட்சிப்படுத்தவில்லை” என பதில் அளித்தார்.

இந்நிலையில் படக்குழுவினருடன் இணைந்து படம் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், படம் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார். மேலும், செய்தியாளர்களைச் சந்தித்து படம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நந்தன் படம் இன்றைக்கு நாடெங்கிலும் பேசப்படுகின்ற முக்கியமான பிரச்னையை மைய்யமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த அளவுக்கு சாதியம் தலைவிரித்து ஆடுகின்றது, எளிய மக்கள் எந்த அளவுக்கு ஒடுக்கப்படுகின்றார்கள், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்த இருக்கைகளில் அமர முடிவதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பவர்களே, அவர்களை எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கி வைக்கின்றார்கள் என்பதை வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடுமையை அவர் விவரித்திருக்கின்றார். எப்படி தனித்தொகுதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றாரள், எப்படி அவர்களின் ஆதிக்க மனோநிலை இருக்கின்றது, என்பதையெல்லாம் இயக்குநர் சரவணன் தத்ரூபமாக பதிவு செய்திருப்பது போற்றுதலுக்குரியது.

எவ்வளவு அடங்கிப்போனாலும் விசுவாசமாக இருந்தாலும் அவர்களை மேலும் மேலும் அடக்கி வைப்பதில் ஆதிக்க சக்திகள் உறுதியாக இருக்கின்றார்கள், ஒன்று சேர்ந்து செயல்படுகின்றார்கள். இறந்துபோன பாட்டியை கொட்டும் மழையில் சேற்றிலே புதைக்கின்ற அவலம். இது கற்பனை அல்ல, புனைவு அல்ல, திரைப்படத்திற்காக இட்டுக்கட்டி எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகள் அல்ல. இது தமிழ் நாட்டிலும் நடக்கின்றது, இந்தியா முழுவதும் நடக்கின்றது.

தனது எஜமானுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும் அவன் கொஞ்சம் கூட தலை நிமிரக்கூடாது எனும் அளவிற்கு சாதி வெறி, இதனை இயக்குநர் மிகவும் ஆழமாக பதிவு செய்துள்ளார். சமுத்திரக்கனி மிகச் சிறப்பாக இட ஒதுக்கீட்டுக்கான பின்னணியை எடுத்துச் சொல்கின்றார். மாரிமுத்துவும் அம்பேத்குமாரும் இணைந்த புள்ளி ஒரு சமூகத்தின் தலைநிமிர்வுக்கான அடையாளமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.