தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன்: விஷால்

“இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, விஜய் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டுக்கு அழைப்பு தேவையில்லை. நானும் அரசியல்வாதி தான்” என நடிகர் விஷால் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் நாடு முழுவதும் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நம் நாட்டில் ஆசிட் வீச்சால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து வெளியேற வர முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியே வரவேண்டும். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியில் இருந்து வந்த பெண் என்னோடு நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன்”என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள், “விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? உங்களுக்கு அழைப்பு ஏதேனும் வந்ததா?” என கேட்க, அதற்கு விஷால், “ஒரு வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் செல்வேன். ஓரமாக நின்று பார்ப்பதற்கு எதற்கு அழைப்பு. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, அவர் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வேனா இல்லையா என்பது இரண்டாம்பட்சம். அவர் செயல்பாடுகள் என்ன? என்ன செய்வார் என்பதை பார்ப்போம். தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள்தான். அந்த வகையில் நானும் ஒரு அரசியல்வாதிதான்.” என்றார்.

அவரிடம், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து கேள்வி கேட்க, “அது அவர்கள் பிரச்சினை, அதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை. திராவிடத்துக்கு எதிரானவனா என கேட்கிறீர்கள். அந்த அளவுக்கெல்லாம் எனக்கு மூளை கிடையாது” என்றார்.