மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் திகில் படமாக உருவாகியிருக்கிறது பிசாசு 2. இந்த படத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இதையடுத்து, ஒப்பந்தப்படி பண பாக்கியை செலுத்ததாத காரணத்தால் இந்த படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட், ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய பணத்தில், ரூ. 2 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகையை திருப்பி கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன் அடிப்படையில், மத்தியஸ்தர் விசாரணையின் பேரில், ரூ. 1 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 மற்றும் ஜிஎஸ்டி முறையில் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரம் வழங்க ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை கடைபிடிக்காமல் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக பிசாசு 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதனால், பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் நவம்பர் 18ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் பிசாசு 2. ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதேபோல் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்தின் டீஸர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தபோதிலும் ரிலீஸுக்கு தாமதமாகி வருகிறது.