சீமான் ‘அமரன்’ படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்!

தீபாவளி ரிலீசாக வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் ‘அமரன்’ படத்திற்கு பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அமரன்’ படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தீபாவளி ரிலீசாக வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’. இந்த வருட தீபாவளி வெளியீட்டில், இப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ரிலீசாகியுள்ள இப்படத்திற்கு பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ‘அமரன்’ படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

‘அமரன்’ படத்தை திரையுலகினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் பார்த்தது பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் இப்படத்தினை பார்த்து விட்டு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்ததாக தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது.

இந்நிலையில் படம் பார்த்த பின் சீமான் பேசிய வீடியோவை தற்போது தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சீமான், ‘கடைசி 20 நிமிடம் இதயத்தை இறுக வைக்கிறது. யாராலும் அதிலிருந்து மீள முடியாது. என் தம்பி சிவகார்த்திகேயனுக்கு இராணுவ வீரராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரை திரையில் முகுந்தனாகவே பார்தேன். அவ்வளவு சிறப்பான நடிப்பு. தம்பி ராஜ்குமார் பெரியசாமிக்குள் இவ்வளவு அசாத்திய திறமை இருக்கிறதா என வியப்பாக உள்ளது. சிறு குறை கூட சொல்ல முடியாதளவிற்கு மிகச்சிறப்பான படைப்பு. என் அண்ணன் கமல் எத்தனையோ படங்களை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். ஆனால் அவர் தயாரித்த ஆகச்சிறந்த படைப்புகளில் அமரனும் ஒன்று. இந்த நாட்டு இராணுவ வீரர்களுக்கு அவர் அர்பணித்த படமாகத் தான் இதை பார்க்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில், ‘நேற்று படம் முடிந்து 2 மணி நேரம் எங்களோடு உரையாடி அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் தந்ததற்கு நன்றி சீமான் அண்ணன்’ எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவியாக சாய் பல்லவியும் வாழ்த்துள்ள அமரனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசி வாயிலாகவும், எஸ்கே, இயக்குனர் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார். மேலும் திரையுலகிலிருந்தது இயக்குநர்கள் அட்லீ, அஸ்வத் மாரிமுத்து, அஜய் ஞானமுத்து ஆகியோரும் ‘அமரன்’ படத்தை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.