கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கங்குவா.” ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த வாரம் உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கங்குவா படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கங்குவா படத்தை தயாரித்து இருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்க வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, வாங்கிய பணத்தை கொடுக்காமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை இன்று வழங்கப்படும் என்று உறுதியளித்தது. அதன்படி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 55 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. இதையடுத்து, கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.