மாடு எங்களுக்கு தெய்வம் போன்றது, அதை சாலையில் விட வேண்டாம்: நிக்கி கல்ராணி!

விலங்குகள் தத்தெடுப்பது பற்றி பேசியதோடு, அதற்கு நிதி வழங்க பலரும் முன் வர வேண்டும் என்று கூறிய நிக்கி கல்ராணி, மாடு எங்களுக்கு தெய்வம் போன்றது, அதை சாலையில் விட வேண்டாம் என கூறியுள்ளார்.

சமூக சேவகரும், டிவி பிரபலமுமான அப்சரா ரெட்டி ‘குட் டீட்ஸ் கிளப்’ சார்பில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு காசோலையை உயிரியல் பூங்கா இயக்குநர் ஆஷிஷ் ஸ்ரீ வஸ்தவாவிடம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நிக்கி கல்ராணி கூறியதாவது:-

விலை உயர்ந்த நாய்களை வாங்கி வீட்டில் பராமரிப்பது போன்று காடுகள் மற்றும் பூங்காக்களில் பராமரிக்கப்படும் உயிரினங்களையும் நாம் தத்தெடுக்கலாம். அந்த விலங்குகளுக்கு தேவையானவற்றை வழங்க நிதியுதவி வழங்கி பராமரிக்க முன்வர வேண்டும். நீங்கள் தத்தெடுக்கும் விலங்கு பூனையாகவோ புலியாகவோ கூட இருக்கலாம். விலங்குகளுக்கு உணவு மட்டுமின்றி மருத்துவ செலவும் தேவைப்படுகிறது. நாம் அவற்றை தத்தெடுப்பதன் மூலம் அவை பூர்த்தியாகிறது.

சின்ன வயதில் இருந்தே எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும். அது நாய், பூனை என்றில்லை. எந்த விலங்காக இருந்தாலும் பாசத்தை வெளிப்படுத்துவேன். எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளது. நமக்கு பிடித்த விலங்குகளை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம். நான் நாய்களை காசு கொடுத்து வாங்கவில்லை. எனக்கு பரிசாக வந்ததை நான் வளர்த்து கொண்டிருக்கிறேன். அதுதான் குட்டி போட்டு தற்போது பெருகியுள்ளது.

சாலைகளில் மாடுகளை விடுவது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு உயிர்தான். சாலையில் மாடுகளை விடாதீர்கள். நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம். அது போல் சாலையில் மாடுகளை விடுகிறீர்கள் என்றால், ப்ளீஸ் அப்படி செய்யாதிங்கன்னு சொல்ல விரும்புறேன்” என்றார். இதை சொல்லும்போது நிக்க கல்ராணி கையெடுத்து கும்பிட்டவாறு கோரிக்கை வைத்தார்.

முன்னதாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை நடிகை நிக்கி கல்ராணி பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள விலங்குகள் பல்வேறு நபர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்த அவர், விலங்குகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயரைக் கூறி அழைத்தார். அத்துடன், விலங்குகளின் பராமரிப்பாளர்களடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.