தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக கடந்த சில வாரங்களாக இருப்பவர் நயன்தாரா. தனுஷுக்கு எதிராக அவர் வெளியிட்ட மூன்று பக்க கடிதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அவருக்கு எதிராக தனுஷும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த விஷயத்தில் பலரும் நயனுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா குறித்து பேசியிருக்கிறார்.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு அவரையே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நயனும், விக்கியும் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் LIK என்ற படத்தையும் இயக்கிவருகிறார். நயனோ மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். ஹிந்தியிலும் அவர் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
சூழல் இப்படி இருக்க நயன் சந்தித்த பிரச்னைகள், அனுபவங்கள், அவரது திருமண காட்சிகள் உள்ளிட்டவைகளை தொகுத்து Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப் படம் உருவானது. அதில் நானும் ரௌடிதான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபுட்டேஜ் மற்றும் இசை உள்ளிட்டவைகளை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இருந்தாலும் ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் மூன்று நொடி காட்சிகள் இடம்பெற்றன. இதனால் கோபமான தனுஷ் பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து நயன்தாராவோ தனுஷை கடுமையாக விமர்சனம் செய்து மூன்று பக்க அளவில் கடிதம் எழுதியிருந்தார். அதில் தனுஷ் அவரது தந்தை, அண்ணனின் துணையோடுதான் இந்த இடத்துக்கு வந்திருப்பதாக பல விஷயங்களை பேசினார். அது நயனுக்கு ஆரம்பத்தில் ஆதரவை பெற்றுக்கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல கடும் கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.
சூழல் இப்படி இருக்க ஆவணப் படத்தில் கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் படத்துடைய ஷூட்டிங் ஸ்பாட் ஃபுட்டேஜுகள் இடம்பெற்றிருந்தன. இதனால் மேலும் அதிருப்தியடைந்த தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இதற்கிடையே இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷுக்கு எதிராக வேண்டுமென்றே கால் மேல் கால் போட்டு நயன் அமர்ந்ததாக சொல்லி தனுஷின் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசுகையில், “நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தமிழ்நாட்டில் வழக்கு போட்டிருக்கிறார். இங்கு மட்டுமில்லை கேரளாவிலும் நயனுக்கு எதிராக வழக்குகள் போய்க்கொண்டிருக்கின்றன. அதாவது அவரது 9 ஸ்கின் என்ற அழகு சாதன பொருள் தரமாக இல்லை என்று ஒரு சமூக செயற்பாட்டாளர் வழக்கு போட்டிருக்கிறார். அதேபோல் கேரளாவில் ஒருவரது இசையை அவரது அனுமதியின்றி தன்னுடைய விளம்பர படத்தில் பயன்படுத்திவிட்டார். அவருக்கு நயனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆகமொத்தம் கேரளாவிலும் நயன் கைவரிசியை காண்பித்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.