கங்குவா படம் எல்லோருக்குமே பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்!

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணமே சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும்தான் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதற்கு காரணம் அவர்கள் இரண்டு பேருமே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தை பற்றி பேசி ஓவராக ஹைப் ஏற்றிவிட்டார்கள். இந்தச் சூழலில் படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து படம் வெளியானது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த படத்துக்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டது. அவரது கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படமும் இதுதான் என்றும்; படத்தின் ரிலீஸுக்கு முன்னரே நடந்த ப்ரீ பிஸ்னெஸ்ஸில் நல்ல வியாபாரம் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சூர்யாவுடன் சிவா முதன்முறையாக இணைந்திருந்ததாலும் ரசிகர்கள் இதன் மீது ஆவலை வைத்திருந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க படத்தின் ப்ரோமோஷனில் சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றினார்கள். இந்தப் படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று ஞானவேல் ராஜா கூறினார்; அடுத்ததாக சூர்யாவோ தான் ஏறிய மேடைகளில் எல்லாம் கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று பேசினார். அதேபோல் இந்தத் திரைப்படத்தை வாயை பிளந்துகொண்டு பார்ப்பார்கள் என்றும் ஒரு மேடையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ரசிகர்களும் ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள். ஆனால் அந்தப் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய ரசிகர்கள்; படக்குழுவினர் ஏற்றிவிட்ட ஹைப்புக்கு படத்தில் எதுவுமே இல்லையே என்றும் ஓபனாக பேசினார்கள். அதுமட்டுமின்றி சூர்யாவையும், சிவாவையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். படமும் மோசமான தோல்வியை சந்தித்துவிட்டது. இதனால் சூர்யா கொஞ்சம் அப்செட்தான்.

அதேசமயம் இந்தப் படத்தை வேண்டுமென்றே தோல்வியடைய செய்துவிட்டார்கள் என்று சில பிரபலங்கள் சப்போர்ட்டும் செய்தார்கள். முக்கியமாக ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவாவை ஆதரித்தும்; விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராகவும் போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். அந்தப் போஸ்ட்டுக்கு பிறகு ஜோதிகாவையும் பலர் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கங்குவா திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் எனது அம்மா பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்றுதான் சொன்னார். கங்குவா திரைப்படம் எல்லோருக்குமே பிடிக்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லையே. சில படங்கள் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. அப்படி இருக்கையில் யாரையும் புண்படுத்தாமல் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் நன்றாக இருக்கும். பிடிக்கவில்லையென்றால் அதை ஓபனாக சொல்லலாம். ஆனால் யாரையும் காயப்படுத்தாமல் சொல்லலாம்”என்றார்.