நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நிக்கோலாய் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில், ஒரு அழகான வீடியோவை வெளியிட்டு கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவும் 14 ஆண்டு காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், நிக்கோலாய் சச்தேவ்வின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது காதல் கணவருக்கு அழகாக வீடியோ வெளியிட்டு வாழ்த்து செய்தி எழுதி உள்ளார். அதில், இந்த ஆண்டு என் வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளது. அவை அனைத்தும் மிக வேகமாக சென்றன, நான் திரும்பிப் பார்க்கும்போது, இதுபோன்ற அற்புதமான நினைவுகளை நாங்கள் உருவாக்கினோம். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதைச் சொல்ல ஒன்றரை நிமிடம் போதாது. நீ உன்னை நேசிப்பதை விட என்னை நேசிக்கிறாய், நீ சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உன் அன்பை வெளிப்படுத்துகிறாய், அது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீ ஒரு உதாரணமாக இருக்கிறாய். பெண்களுக்கு நீ கொடுக்கும் மரியாதை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. நீ என்னை எப்போதும் பாதுகாக்கிறாய். உன்னை விட்டு என்னை ஒரு நொடி கூட போக விடாதே. இப்படி ஒரு கணவனைப் பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி பெண் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இனி நான் கடவுளிடம் கேட்க எதுவும் இல்லை. உலகின் தலைசிறந்த கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ஐ லவ் யூ என வரலட்சுமி தனது ஆசை காதல் கணவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.