“அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் காட்சியை சென்னையில் பார்த்த இயக்குநர் வெற்றிமாறன், திரையரங்கிலிருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரசிகர்களுடன் சேர்ந்து 10 நிமிடம் படம் பார்த்தேன். படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து அவர்கள் தான் சொல்ல வேண்டும். அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றிய அமித்ஷா, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு “பேஷன்” ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என பேசியது குறிப்பிடத்தக்கது.