’விடுதலை 2’ படம் ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக இப்போது தான் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. “படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம். கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்” என்று பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
தற்போது படம் வெளியாகிவிட்டதால் வெற்றிமாறன் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘விடுதலை’ படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகளின் நீளம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:-
’விடுதலை 2’ படம் இயக்குநரின் கட் வடிவில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும் என நினைக்கிறேன். எனவே, படம் ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும். முதல் பாகத்தில் 11 நிமிடங்கள் கூடுதலாக இருந்தது என நினைக்கிறேன். எவ்வளவு படமாக்க முடியுமோ, அவ்வளவு வைத்துள்ளோம். இப்போது முதல் பாகம், திரைப்பட விழா வடிவம் (4 மணி நேரம்), இரண்டாம் பாகத்தின் முதல் பாதி 1:45 மணி நேரம், இரண்டாம் பாதி 1:55 மணி நேரம் என எல்லாத்தையும் சேர்த்தால் 8 மணி நேர படம் இருக்கிறது. அதனை வைத்து 4 பார்ட் பண்ணலாம். இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.