கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் சிக்கடப்பள்ளி போலீஸார் அனுப்பிய புதிய சம்மனை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.
‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.