உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. குகேஷுக்கு தமிழகம், இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அங்கு அவருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன், குகேஷுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார். இந்த சந்திப்பில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.