நடிகையாக இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்: வாணி போஜன்!

சன் டிவியின் தெய்வமகள் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் வாணி போஜன். 36 வயதான அவருக்கு எப்போது திருமணம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் வாணி போஜன் சலித்துக் கொண்டார்.

நடிகை வாணி போஜனுக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது சன் டிவியின் தெய்வமகள் சீரியல். முன்னதாகவும் பிறகும் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் தெய்மகள் சத்யா கேரக்டர் அளவிற்கு இவருக்கு எந்த கேரக்டரும் அமையவில்லை. இந்த சீரியல் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒளிபரப்பான நிலையில், தங்கள் வீட்டு மகளாக சத்யாவின் பிரச்சினைகள் அனைத்திலும் பங்கேற்க ரசிகர்கள் தயாராக இருந்தனர். இவரை எதிர்த்த காயத்ரிக்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் காணப்பட்டன. சமீபத்தில் இந்த சீரியல் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்ட நிலையில் அண்ணியாரிடம் மல்லுகட்ட ரசிகர்கள் தயாராக இருந்தனர். சீரியல்கள் மூலம் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்திக் கொண்டார் வாணி போஜன். சினிமாவில் ஓ மை கடவுளே படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்த இவர், அடுத்தடுத்து லாக் அப், ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும், மிரள், லவ், அஞ்சாமை என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்ளிலும் ஆக்டிவாக காணப்படும் வாணி போஜன், தொடர்ந்து போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை இரண்டரை மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் கலர்புல்லாக காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்ட வாணி போஜன் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவரிடம் சினிமா குறித்தும் அவரது படங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டன. இதனிடையே 36 வயதான அவருக்கு எப்போது திருமணம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் வாணி போஜன் சலித்துக் கொண்டார். அவரது முகமே மாறிவிட்டது. இதையடுத்து அருகிலிருந்த தொகுப்பாளர் பர்சனல் கேள்விகளை கேட்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ள, தொடர்ந்து மற்ற கேள்விகளுக்கு வாணி போஜன் பதிலளித்தார்.

முன்னதாக இதேபோன்றதொரு நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்களுக்கு தான் கவலைப்பட்டதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் ஆபாசமாகவும் நடிகர்களுடன் இணைத்தும் வதந்திகள் வந்தால் கஷ்டமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். கூட நடிக்கும் நடிகர்களுடன் நட்பாக பழகினால் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஆனால் நடிகையாக இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.