எனக்கு நேர்ந்த அத்தனை விஷயங்களையும் நான் சொல்லிவிட்டேன்: பார்வதி!

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார் பார்வதி. அதில் ஹேமா கமிட்டி, பெண்களுக்கான திரையுலக கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

நடிகை பார்வதி கூறியுள்ளதாவது:-

நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஹேமா குழுவிடம் பேசியபோது, எனக்கு நேர்ந்த அத்தனை விஷயங்களையும் நான் சொல்லிவிட்டேன். ஹேமா குழு அறிக்கை வெளியானபோது நாங்கள் அனைவருமே சோகம் கலந்த மகிழ்ச்சியை உணர்ந்தோம். நாம் ஒரு தவறை எதிர்க்க ஆரம்பிக்கும்போது பொது மக்களும் நம்முடன் நிற்பார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.

ஆரம்பத்தில், WCC போன்ற ஓர் அமைப்புக்கு திரைத் துறையில் எப்படியான இடம் கொடுக்கப்படும் என்று எங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால், எப்போதெல்லாம் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைப் பற்றி நான் கூறுகிறோனோ அப்போதெல்லாம் அதை விட்டுவிடு என்றே மற்றவர்கள் அறிவுறுத்தி வந்தார்கள். ஆனால் WCC ஆரம்பிக்கப்பட்டவுடன் பல்வேறு இடங்களில் இருந்து ஆதரவு குவிய ஆரம்பித்தது.

ஆலிஸ் வாக்கர் எழுதிய ‘பை தி லைட் ஆஃப் மை ஃபாதர்ஸ் ஸ்மைல்’ என்கிற புத்தகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவே நான் வெளிப்படையாகப் பேசுவதற்கும், தவறுகளை எதிர்த்து நிற்கவும் என்னை ஊக்குவித்தது.

திரைத் துறையில் இருக்கும் பெண்கள் அவர்கள் துறைக்கு வந்த முதல் 10 வருடங்களுக்குள், முடிந்த வரை அதிகமான படங்களில் நடிப்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தத் துறையில், புதிய, இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் என்கிற கருத்து இன்றும் நிலவுகிறது.

எதிர்காலத்தில் நான் எடுக்கவுள்ள திரைப்படம் ஒன்றில், திரைத் துறையில் பெண்களின் நிலை என்ன என்பது பற்றி நான் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் வெளிப்படுத்துவேன். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் எதிர்த்து போராட ஆரம்பித்ததும், மலையாள திரைத் துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.