மமிதா பைஜுவை அடித்ததாக உருவான சர்ச்சைக்கு இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.
ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியில் மமிதா பைஜுவை அடித்ததாக வெளியான செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் பாலா.
மமிதா பைஜு சர்ச்சை தொடர்பாக பாலா கூறியதாவது:-
மமிதா பைஜு என் மகள் மாதிரி. அவளைப் போய் எப்படி அடிப்பேன். இன்னொன்று பெண் பிள்ளையை யாராவது அடிப்பார்களா? மும்பையில் இருந்து வந்த மேக்கப் ஆட்கள், இவருக்கு மேக்கப் போட்டுவிட்டார்கள்.
எனக்கு மேக்கப் பிடிக்காது என்று அவர்களுக்கு தெரியாது. மேக்கப் போடாதீர்கள் எனக்கு பிடிக்காது என்று மமிதா பைஜுவுக்கும் சொல்ல தெரியவில்லை. ஷாட் ரெடி என்றவுடன் மேக்கப்போடு வந்துவிட்டார். யார் மேக்கப் போட்டது? என்று கையை ஓங்கினேன். உடனே அடித்துவிட்டார் என செய்தி வந்துவிட்டது. உண்மையில் இதுதான் நடந்தது. இவ்வாறு பாலா கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட ‘வணங்கான்’ படத்தில் முதலில் மமிதா பைஜு நடித்தார். பின்பு அவர் விலகிக் கொள்ளவே, கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார். இறுதியாக அப்படம் முழுமையாக கைவிடப்பட்டது. தற்போது அதே பெயரில் அக்கதையினை அருண் விஜய்யை வைத்து இயக்கி இருக்கிறார் பாலா. இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது.