ஆந்திர அமைச்சரவையில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டதாம். அவருக்கான துறை என்ன என்பது குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
ஆந்திர முதல்வராக ஜெகனமோகன் ரெட்டி பதவியேற்ற போது இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பணியை செய்யாத அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் வேறு நபர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி தற்போது 24 அமைச்சர்களை ராஜினாமா செய்யுமாறு ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியதை அடுத்து 24 பேரும் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிகிறது.
புதிய அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து அரசு ஆலோசகர் ராமகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளார். அமைச்சர்களின் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகு அதை ஆளுநருக்கு சீலிடப்பட்ட கவரில் அனுப்பி வைக்கப்படும் என்றார் அரசு ஆலோசகர்.
இந்த நிலையில் தற்போது ஆந்திராவின் மாவட்டங்கள் 13 லிருந்து 26 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என நியமிக்க ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார். அதன்படி நகரி தொகுதி சித்தூர் மாவட்டத்திற்ககுட்பட்டது என்பதால் நடிகை ரோஜாவுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது. இது தற்போது உறுதியாகியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். அவருக்கு என்ன இலாகா என்பது இன்று மாலை தெரியவருமாம். அனேகமாக அவருக்கு பள்ளிக் கல்வித் துறை ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.