“தமிழர்கள் புத்திசாலிகள், உழைப்பாளிகள், நன்றி உள்ளவர்கள், நாணயமாக இருப்பார்கள்” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில், காணொலி வாயிலாக கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் இதயம் என்றால் மும்பை என்று சொல்வார்கள். பொருளாதார தலைநகரம் என்றால் அது மும்பை. அங்கே அம்பானி, டாடா ஆகியோருடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்துள்ளன.
அரசியல் தலைநகரம் என்றால் அது டெல்லி. டெல்லி என்று சொன்னால், பிரதமர் வாஜ்பாய் முதல் மோடி வரை அவர்கள் அருகே அமர்ந்து டிபன் சாப்பிட்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் டாடா ஆகட்டும், அம்பானியாகட்டும், அமைச்சர்கள் ஆகட்டும் இவர்களின் தனிப்பட்ட மேனேஜனர்கள், ஆலோசகர்களில் 70-75 சதவீதம் பேர் தமிழ் மக்களாக தான் இருக்கிறார்கள்.
மும்பையிலும் சரி, டெல்லியிலும் சரி. தமிழர்கள் புத்திசாலிகள், உழைப்பாளிகள், நன்றி உள்ளவர்கள், நாணயமாக இருப்பார்கள். அந்த குணம் தமிழரின் குணம். இது இருப்பதால் தான் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
2047-ல் இந்தியா வல்லரசு நாடாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 10-15 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக மேலும் இந்தியா முன்னேறும். உங்கள் கடமைகளை முடித்துவிட்டு இந்தியா வந்துவிடுங்கள். நீங்கள் இப்போது அங்கு இருக்கிறீர்கள். உங்களுக்கு தற்போது 50, 55 வயது இருக்கும். உங்களுடைய மகன்களுக்கு 15, 20 வயது இருக்கும். இன்னும் 10 வருடங்களில் அவர்களுக்கு கல்யாணம் ஆகி விடும். அதன் பின்னர் நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டாம். நீங்கள் பிறந்த இடத்தில் இப்போதே நல்ல வீட்டை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் கடமைகளை முடித்த பின்னர் நீங்கள் இங்கே வந்து விடுங்கள்.
பழமொழி ஒன்று இருக்கிறது. பிச்சை எடுத்தாலும் உள்ளூரில் பிச்சை எடுக்கக் கூடாது. வெளியூரில்தான் பிச்சை எடுக்க வேண்டும். செத்தாலும் உள்ளூரில்தான் சாக வேண்டும். வெளியூரில் சாகக்கூடாது. ஆகையால் கடைசி காலத்தில், இங்கு வந்து உங்களது பழைய நினைவுகளை அசை போடுங்கள்.
50 ஆண்டுகளாக நான் சினிமாவில் நடித்து வருகிறேன். எல்லாம் உங்களின் ஆதரவு. மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாழ்வில் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல், அட்ஜெஸ்ட், அடாப்ட், அக்காமடேட் செய்து சந்தோஷமாக இருக்கங்கள். இவ்வாறு அவர் கூறினார்.