இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை. நல்ல பாடகர்களும் இல்லை. கோடம்பாக்கம் தூங்குகிறது என்று பி.சுசிலா கூறியுள்ளார்.
இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார். மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய இசையமைப்பாளர்களின் இசை மற்றும் பாடல்களை பி.சுசிலா சாடி உள்ளார். இதுகுறித்து சேலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பி.சுசீலா கூறியதாவது:-
இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை. நல்ல பாடகர்களும் இல்லை. கோடம்பாக்கம் தூங்குகிறது. இதை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்து பாடல்கள் இனி எப்போதும் வராது. எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் ஆகியோர் இசையமைப்பாளர்களாக இருந்த காலத்தில் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தாலே பாட்டு மட்டும்தான் ஒலிக்கும். இப்போது அப்படி இல்லை. ரசிகர்கள் இல்லையேல், பாடகர்கள் இல்லை. இப்போது எனது குரல் மாறிவிட்டது. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற பாடல்களை இப்போது என்னால் பாட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.