மது விற்பனைக்கு நேரக் கட்டுப்பாடு தேவை: சரத்குமார்!

மது விற்பனைக்கு நேரக் கட்டுப்பாடு தேவை. தொடர்ச்சியான வன்முறைகள் வேதனை அளிப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

ஒவ்வொரு நாளும் கொலை மற்றும் பாலியல் பலாத்கார செய்திகளைக் கண்டும் கேட்டுமே மக்கள் மனம் பாதிப்படைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு தொடர்ச்சியாக இங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஆழமான வேதனையை அளிக்கிறது.

வேலூரில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற 13 வயது சிறுமி மது போதையில் இருந்த 3 நபர்களால் கல்குவாரிக்குத் தூக்கிச் செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, சம்பவம் நடந்த இடம் வேறு எல்லையில் வருவதாகக் கூறி அங்கும் இங்கும் சிறுமியின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஆறுதலையும் அளித்து இது போன்ற சூழலில் அவர்கள் பிற காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் சட்டரீதியான வழிகள் குறித்து சிந்திக்க வேண்டுமே அல்லாமல், துன்பத்தில் இருப்பவர்களை அலைக்கழிக்கக் கூடாது என சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும்.

பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படைக் காரணமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு மது விற்பனைக்கு உறுதியான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். பெண்களின் சிரமங்களைக் குறைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய, வீட்டில் கழிவறைகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசு நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் இது போன்ற பகுதிகளில் இன்னும் கழிவறைகள் இல்லாதது ஏன் என்று விசாரிக்கப்பட வேண்டும். பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்களுக்கு உடனடியான தீர்ப்பு வழங்கி, கடும் தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று நீதித்துறையிடம் பணிவான கோரிக்கையை முன் வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.