மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்து உத்தரவிட்டனர்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க கோரி அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரபட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தனியார் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தின் மீதும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர் தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
மேலும் அவர், பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்தார்.
உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை எனத் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதாகக் கூறிய வழக்கறிஞர், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் மார்ச் 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் எனவும். இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தீர்ப்பளித்தனர்.
மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் இட ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்து உத்தரவிட்டனர்.