ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம். சமஸ்கிருதத்தில் ஏற்கவில்லை என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்தனர்.
மதுரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன் தினம் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர் சங்கத் தலைவர் உறுதிமொழியை வாசிக்க அதை முதலாண்டு மாணவர்கள் வாசித்தனர். அதில் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் பெயரில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக உணர்வுப்பூர்வமான விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு அரசுக் கல்லூரியில் நிகழ்ந்த இப்படிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து மாணவர் சங்கத்தினர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி என்பது இரு நாட்களுக்கு முன்னர்தான் எங்களுக்கு தெரியும். இதனால் நிகழ்ச்சியை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தோம். நாங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் இருந்துதான் உறுதிமொழியை டவுன்லோடு செய்தோம். அதிலும் ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோமே தவிர சமஸ்கிருதத்தில் அல்ல. அவசரமாக நடந்த நிகழ்ச்சியால் நாங்கள் டவுன்லோடு செய்த காப்பியை டீனிடம் காண்பிக்க முடியவில்லை. மேலும் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது. நேற்று மதியம்தான் சுற்றறிக்கை வந்தது என மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்துள்ளார்கள்.
சமஸ்கிருத சர்ச்சை தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமைச்சர்கள் முன்பு இப்படி சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பொறுப்பு டீனாக துணை முதல்வர் பதவியிலிருந்தவர் பொறுப்பேற்றார்.
இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், கல்லூரி டீன் என்பவர் பெரிய பொறுப்பில் இருக்கிறார். எங்களுக்கு தெரியாமலேயே இது போன்ற தவறு நடந்து விட்டதாக எப்படி கூறமுடியும். இது தமிழகத்தில் நடக்கும் சென்சிட்டிவான விஷயமல்லவா? அதனால்தான் டீன் மீது நடவடிக்கை எடுத்தோம். விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இதுகுறித்து ராஜ்யசபா எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது. டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். ஒரு மூத்த டாக்டர் அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை அளிப்பதாக ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.