இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.
மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கூட்டணியை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்த்து ஆட்சியமைத்தது. அந்த நாள் முதல் சிவசேனாவுக்கு பா.ஜனதா நேரடியாகவும், மறைமுகமாகவும் குடைச்சலை கொடுத்து வருகிறது. சிவசேனா இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி செயல்படுவதாக கூறி, அந்த கருத்தை இந்து வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா சதி செய்வதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக கொங்கன் மண்டல சிவசேனா மாவட்ட தலைவர்களுடன் அவர் ஆன்லைனில் உரையாற்றியபோது பேசியதாவது:-
மேற்கு வங்காளம், கேரளாவில் செய்தது போல மராட்டியத்தை இந்து எதிர்ப்பு மாநிலமாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மராட்டியத்தில் இந்துக்கள் இடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா சதி செய்கிறது. இதேபோல மராத்தியர்கள், மராத்தியர் அல்லாத மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் முனைப்பில் செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார். சிவசேனா முன் போலி இந்துத்வாவாதிகள் எதிர்த்து நிற்க முடியாது என்று நான் உறுதிபட கூறிக்கொள்கிறேன். விரைவில் மராட்டியத்தின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
மசூதிகளில் தொந்தரவாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதப் பிரச்சினை அல்ல, இது ஒரு தேசிய பிரச்சினை. எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். அவர்கள் (முஸ்லிம்கள்) சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு மகாராஷ்டிராவின் சக்தியைக் காட்டுவோம்.
ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கேட்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்வதைத் தடுப்பது எது? மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமான் சாலிசா வை ( பாடல்கள்) மசூதி ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக ஒலிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.