இலங்கையில் புது அரசு ஒன்றை அமைப்போம் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியுள்ளார்.
இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில், முன்னாள் அதிபர் மற்றும் இலங்கை விடுதலை கட்சியின் தலைவரான மைத்ரிபால சிறிசேனா தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொலன்னருவா பகுதியில் பேரணி ஒன்றை நடத்தினார். இதில் அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, நாட்டில் பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை மற்றும் அரசு ஊழியர்களும் தெருக்களில் இறங்கி அரசை வீட்டுக்கு போகும்படி வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காரணத்திற்காகவே, நானும் இந்த தொழிலாளர் தினத்தில் தெருவில் இறங்கியுள்ளேன். நாட்டில் ஒரு புது அரசு அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனை நாங்கள் செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஆயிரக்கணக்கில் பிரச்னைகள் உள்ளன. மக்கள் மனஅழுத்த நிலையில் உள்ளனர். பொலன்னருவா பகுதியில் வசிக்கும் விவசாயிகள், இலங்கையை தன்னிறைவு பெற்ற நாடாக்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால், தினசரி அடிப்படையில் கூட அவர்களால் தற்போது பயிர் செய்ய முடியவில்லை. அதனால், நாட்டில் ஆளும் வர்க்கத்தினருக்கு, உழைக்கும் பிரிவினரின் குரலை ஓங்கி ஒலிக்க செய்யவும், அவர்களின் பிரச்னைகள் மற்றும் அவர்கள் சந்தித்து வரும் சவால்களை எடுத்து கூறவும் நான் இந்த மே தின பேரணியில் பங்கேற்றுள்ளேன் என்று சிறிசேனா கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை அரசு நாடி வருகிறது. அதேநேரம் தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காண வழி தெரியாத ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என புத்த மத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இடைக்கால அரசு அமைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு எதிராக மத ஆணை பிறப்பிக்கப்படும் என புத்தமத தலைவர்களில் ஒருவரான அகலக்கடா சிறிசுமனா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. எனவே புதிய பிரதமர் மற்றும் புதிய மந்திரி சபை தலைமையில் இடைக்கால அரசு அமைக்க அவரும் நடவடிக்கை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது.