சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க இந்திய பிரதமர் மோடி தயாராகவே இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்கள் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே 1- உழைப்பாளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை இன்று பேசியதாவது:
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொடங்கிய செளமியமூர்த்தி தொண்டைமான், மலையக தமிழருக்கு மட்டுமல்ல தமிழக தமிழருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர். குரல் அற்றவர்களின் குரலாக ஒலித்தவர் அவர். செளமியமூர்த்தி தொண்டைமான் வழியில் ஆறுமுகம் தொண்டைமானும் மக்கள் உரிமைகளுக்காகப் போராடினார், பாடுபட்டார். இந்தியாவில் நடைபெறும் பிரதமர் மோடியின் ஆட்சியை ஒட்டுமொத்த உலகமுமே திரும்பிப் பார்க்கிறது. சர்வதேச அளவில் பொருளாதார்த்தில் 5-வது பெரிய நாடாகி உள்ளது இந்தியா. உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை சிறு காயம் கூட இல்லாமல் பிரதமர் மோடி மீட்டுள்ளார்.
இலங்கை அண்டை நாடு; சொந்தங்கள் வாழும் நாடு.. அதனால் இந்தியா, இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டுகிறது. மலையக மக்களுக்கான இந்தியாவின் உதவி தொடரும். மலையக மக்களின் கல்வி தரத்தை உயர்த்துவோம். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நீண்டகாலம் நீடிக்காது; இந்த நிலைமை மாற வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.இலங்கையை மீட்பதற்காக இந்தியா போராடிக் கொண்டிருக்கிறது. சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல இலங்கையின் பொருளாதார் நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை உரையாற்றினார்.
இந்நிகழ்க்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் பேசியதாவது:
இலங்கை வந்த பிரதமர் மோடி மலையகம் வருகை தந்தார். மலையக மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்ற செய்தியை உலகத்துக்கு சொன்னார் பிரதமர் மோடி. எத்தனையோ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கு வருகை தந்துள்ளார். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. இவ்வாறு செந்தில் தொண்டைமான் பேசினார்.