ரஷ்யா போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, போருக்கு மத்தியில் எம்.பி.க்கள் குழுவுடன் உக்ரைன் தலைநகர் கீவுக்கு நேற்று முன்தினம் சென்றார். இந்தப் பயணம் முன்பே அறிவிக்கப்படாத திடீர் பயணம் ஆகும். நான்சி பெலோசி தலைமையில் அமெரிக்க எம்.பி.க்கள், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்கள்.
அப்போது ஜெலன்ஸ்கியிடம் நான்சி பெலோசி, “சுதந்திரத்துக்கான உங்கள் போராட்டத்துக்கு வாழ்த்து சொல்லத்தான் நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் சுதந்திரத்தின் எல்லையில் இருக்கிறோம். உங்கள் போராட்டம் அனைவருக்குமான போராட்டம் ஆகும். இந்தப் போராட்டம் முடிகிறவரையிலும், உங்களுடன் உறுதியாக இருப்போம்” என்று கூறினார்.
உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றி விட்டபோதும், அஜோவ் உருக்காலையை வசப்படுத்த முடியவில்லை. அந்த ஆலைக்குள் 2 ஆயிரம் படை வீரர்களும், ஆயிரம் பொதுமக்களும் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த ஆலையில் உள்ளவர்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நேரில் வலியுறுத்தினார்.
அந்த நகரில் 1 லட்சம் அப்பாவி மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து, வெப்ப கருவிகள் போன்ற எதுவும் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். இந்த நிலையில் அந்த நகரில் சிக்கித்தவித்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்படுவதாக பல தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜோவ் உருக்காலை அருகேயுள்ள குடியிருப்புகளில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 46 பேரைக் கொண்ட 2 குழுக்கள் வெளியேறியதாகவும், அவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் சொல்கிறது. .இந்த உருக்காலையில் இருந்து 14 பேரைக் கொண்ட குழுவினர் வெளியேறி, தற்காலிக தங்குமிடத்துக்கு போய்ச்சேர்ந்துள்ளதாக ஊடக தகவல் ஒன்று கூறுகிறது. இதுவரை இந்த உருக்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள் என 20 பேர் வெளியேறி இருப்பதாக உக்ரைன் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்தியில் உக்ரைன் போரில் ரஷ்யா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் கார்கிவ் நகர பகுதியில் உக்ரைனின் ‘சு-24’ ரக போர் விமானங்கள் இரண்டை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. இதுபற்றி ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை தாக்கியதாகவும், ஒடேசா நகருக்கு அருகே ராணுவ விமான நிலையத்தின் ஓடுபாதையை துல்லியமான ஏவுகணைகளால் தாக்கி அழித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.