குஜராத்தில் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால்

குஜராத் மாநில சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்ததாலும் ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும் என்று டெல்லி முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற வேண்டும். குஜராத்தில் ஆளும் பாஜகவை பொறுத்தவரை மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என நம்புகிறது. இன்னொரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இழந்த அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என கணக்குப் போடுகிறது. தற்போது மும்முனை போட்டியை உருவாக்க கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய உற்சாகத்துடன் குஜராத் தேர்தல் கோதாவில் குதித்துள்ளது ஆம் ஆத்மி.

இந்த நிலையில் குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

குஜராத்தில் பாஜகவை வீழ்த்த எந்த கட்சியுமே இல்லை என அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். ஒன்றை நினைவில் வைத்து கொள்ளட்டும். குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. பாஜகவின் அகம்பாவத்தை குஜராத் வாக்காளர்கள் சுக்கு நூறாகத் தகர்க்கப் போகின்றனர். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து பாருங்கள். எங்களது அரசாங்கத்தை நீங்கள் விரும்பாவிட்டால் நீங்களே தூக்கியும் எறியலாம். நாட்டில் மிகவும் நேர்மையான ஊழல் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரன் நான். எத்தனையோ பேர் எனக்கு எதிரான விசாரணைகளை நடத்தினார்கள். ஆனால் அவர்களால் எனக்கு எதிராக எதனையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

குஜராத்தில் 6000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல பள்ளிகள் பாழடைந்த நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் சீர்குலைந்துள்ளது. டெல்லியில் பள்ளிகளை மாற்றும் விதத்தில் குஜராத்தின் எதிர்காலத்தை மாற்றலாம். குஜராத்தில் தேர்வின்போது கேள்வி தாள் கசிந்ததில் பாஜக உலக சாதனை படைத்து வருகிறது. கேள்வி தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன். குஜராத் மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த வாய்ப்பில் நான் பள்ளிகளை மேம்படுத்தவில்லை என்றால் நீங்கள் என்னை வெளியேற்றலாம்.

குஜராத் மாநிலத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என பாஜக திட்டமிட்டுவதாக கூறப்படுகிறது. அப்படியானால் ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து பாஜக அச்சப்படுகிறதா? பாஜகவைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சிக்கு கால அவகாசம் தந்துவிடக் கூடாது என நினைக்கிறது. டிசம்பர் மாதம் வரை ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என அச்சப்படுகிறது பாஜக. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. கடவுள் எங்களுடன் இருக்கிறார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும்.. அதாவது இப்போதும் சரி அல்லது 6 மாதம் கழித்து நடத்தினாலும் சரி. வெல்லப் போவது நிச்சயம் ஆம் ஆத்மி கட்சிதான். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.