உஸ்மானியா பல்கலை கழகத்தில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்திக்க மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தெலுங்கானா மாநில சட்டசபையில் 119 இடங்கள் உள்ளன. தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே தெலுங்கானா தேர்தல் களம் அனலடிக்க தொடங்கி உள்ளது. தெலுங்கானாவை பொறுத்தவரையில் ஆளும் டிஆர்எஸ் கட்சி தங்களை வீழ்த்த யாரும் இல்லை என்கிற மிதப்பில் உள்ளது. 2018 தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மொத்தம் 88 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. தெலுங்குதேசம் கட்சியால் தெலுங்கானாவில் சோபிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்பதில் காங்கிரஸூம் பாஜகவும் வரிந்து கட்டுகின்றன. ஆனால் ஆளும் டிஆர்எஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைப்பதில் படுமுனைப்பாக இருக்கிறது. இதன் முதல் கட்டமாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் அக்கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது. இத்தனைக்கும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையக் கூடும் என கூறப்பட்ட நேரத்தில் டி.ஆர்.எஸுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது சர்ச்சையானது. பின்னர் காங்கிரஸிலேயே இணையவே இல்லை என அறிவித்தா பிரசாந்த் கிஷோர்.

இந்த சூழலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து தெலுங்கானாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மே 6,7 ஆகிய தேதிகளில் தெலுங்கானாவில் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, வாரங்கலில் 5 லட்சம் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். அதன்பின்னர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி கேட்கப்பட்டிருந்தது. உஸ்மானியா பல்கலை கழகமானது தெலுங்கானா தனி மாநில பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உக்கிரமான பங்களிப்பை செய்திருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் வெடித்திருந்தன. இதனால் ராகுல் காந்தி, மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி மறுத்து உஸ்மானியா பல்கலை. நிர்வாகம். ஆனால் ராகுல் காந்தியை கண்டு அச்சப்பட்டுதான் ஆளும் டிஆர்எஸ் கட்சியும் முதல்வர் கேசிஆரும் உஸ்மானியா பல்கலைக் கழகத்துக்கு நெருக்கடி தந்து அனுமதி மறுக்க செய்தனர் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.