பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்: மதுரை ஆதீனம்
தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சைவ சமயம் சார்ந்த பிரசித்தி பெற்ற ஆதீனம் மடம் உள்ளது. இங்கு மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடம் பழமையான சைவ பீடம் ஆகும். இங்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனமாக பதவி வகித்து வருகிறார். தர்மபுரம் ஆதீனம் மடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வு ஆகும். அப்போது தர்மபுரம் ஆதீனத்தை வெள்ளிப் பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் மடத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இது எங்களைப் போன்ற சைவ மட ஆதீனகர்த்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரம் ஆதீனம் எனக்கு குருநாதர் ஆவார். நான் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் நிச்சயமாக கலந்து கொள்வேன். அப்போது தமிழக அரசு உத்தரவின் அடிப்படையில் வெள்ளிப் பல்லக்கு தூக்க எவரும் முன் வரவில்லை என்றால், நானே களம் இறங்குவேன். தருமபுரம் ஆதீனத்தின் வெள்ளிப் பல்லக்கை நானே தூக்குவேன். இந்த வகையில் என் உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்.
தமிழக ஆளுநர் கருப்புக்கொடி போராட்டத்தையும் மீறி தருமபுரம் ஆதீனத்துக்கு சென்றார். எனவே தமிழக அரசு ஆத்திரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாகவே தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். தர்மபுரம் ஆதீனம் மடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி மீண்டும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வை முதல்வர் நடத்தவேண்டும்.
நான் தருமபுர ஆதீனத்தில் தான் படித்தேன். தருமபுர ஆதீனத்தில் தேவார பாடசாலை, சைவநெறி பாடசாலை அமைக்கப்பட்டு அறம் வளர்க்கப்பட்டது. சைவத்தையும் தமிழையும் பாதுகாக்கும் பீடம் தருமபுர ஆதீன மடம். பட்டின பிரவேச நிகழ்ச்சி காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்தது. ஜனாதிபதியே விரும்பிய ஆதீனம் தருமபுர ஆதீனம். வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர், ஜெயலலிதா காலத்தில் கூட இது நடந்தது. இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? தமிழக முதல்வர் ரகசிய காப்பு பிரமானம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என்று எவரும் சொல்ல முடியாது. அது போலத்தான் இந்த நிகழ்ச்சி.
திருநாவுக்கரசர் பல்லக்கை திருஞானசம்பந்தர் சுமந்துள்ளார். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுர ஆதீனம் மற்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி வருடாவருடம் நடக்கும். தருமபுரம் பட்டினபிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும். அரசு உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் சொல்வேன்.
நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடியவன். அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு அல்ல. சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பரிய நிகழ்வை எப்படி தடை செய்யலாம்? என்னை வேண்டுமானால் சுட்டு கொல்லட்டும். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை. இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வு.
தமிழ்த்தாய் கொலுவிருக்கும் இடம்தான் ஆதீனம். எப்படி போப் ஆண்டவரை கிறிஸ்தவர்கள் போய் சந்திக்கிறார்களோ, அது போலத்தான் தமிழ் சைவ நெறிக்கு ஆதாரமாக விளங்கும் தருமபுரம் ஆதீனத்தை நாங்கள் சென்று பார்க்கிறோம். திராவிடர் கழகத்தலைவர் வீரமணிக்காக இது போன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.