பிரதமர் அலுவலத்தின் திட்டமிட்ட சதி செயல் காரணமாக தன்னை அசாம் போலீசார் கைது செய்ததாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பனாஸ்கந்தாவில் உள்ள வத்காம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் பிரதமர் மோடியை விமர்சித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக, புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி அவரை அசாம் போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே பெண் காவலரை தாக்கியதாக மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பார்பெட்டா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இது தொடர்பாக நேற்று மேவானி அளித்த பேட்டியில், ‘‘என்னுடைய கைது நடவடிக்கை 56 இன்ச் கோழைத்தனமான செயல். அசாம் போலீசார் என்னை கைது செய்தது பிரதமர் அலுவலகத்தினால் வடிவமைக்கப்பட்ட திட்டமிட்ட சதியாகும். குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.1.75லட்சம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, உனாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக பதியப்பட்டு அனைத்து வழக்குகளையும் நீக்க கோரி ஜூன் 1ம் தேதி குஜராத்தில் பந்த் நடத்தப்படும்’’ என்றார்.