இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்க தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்குவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் படகுகள் மூலமாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதைத்தொடர்ந்து இலங்கைக்கு தமிழகம் சார்பில் உதவி பொருட்கள் அனுப்ப மத்திய அரசிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரி இருந்தார். அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது.
இந்த வேண்டுகோள் வெளியான சில மணித்துளிகளில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்ததோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாடும் மக்களுக்கு, முதல் ஆளாக உதவி செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு நிதி உதவி கணக்கை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“அற்றார் அழிபசி தீர்த்தல் அக்தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”
என்பது வள்ளுவர் வாக்கு.
“உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
எல்லைகளை கடந்து உலக மாந்தராக சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். அந்தவகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்ப உள்ளோம்.
மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக தி.மு.க.வின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும் தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.