விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார்
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தம்பதி தங்களின் 30 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்த கோடீஸ்வர தம்பதிக்கு ஜென்னர், ரோரி மற்றும் போபே ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். விவகாரத்து செய்து கொண்டபோதிலும் இருவரும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளைக்காக தொடர்ந்து இருவரும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டமாகி போனது. இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று. எனக்கு இது வித்தியாசமான காலம்; சிலவற்றை உணர்த்திய காலம் இது. குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒவ்வொரு திருமணமும் மாற்றத்தை நோக்கி செல்கிறது. விவாகரத்து ஆனாலும் எங்கள் திருமணம் சிறந்த திருமணம். நாங்கள் ஒன்றாக அறக்கட்டளையை உருவாக்கினோம். முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எங்கள் அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. மெலிண்டாவும் நானும் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டமும் இதுவாகும். மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன். அவருடன் எனக்கு மிக முக்கியமான, நெருக்கமான அதேசமயம் சிக்கலான உறவு இருந்தது. இருப்பினும் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தோம்.
எங்களின் திருமணம் ஏன் முதலில் முடிவுக்கு வந்தது என்பதைப் பொறுத்தவரை திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது வீணானது. விவாகரத்தின் தாக்கத்தில் இருந்து இருவரும் மீண்டு வருகிறோம். நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை பரிந்துரைக்கிறேன். மெலிண்டா என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.