ம.பி.யில் மீண்டும் பயங்கரம்: 2 பழங்குடியினரை அடித்தே கொன்ற கும்பல்!

மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் அதிகரித்து, கொலைகளும் நடைபெற்று வருகின்றன. அதாவது, இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது. அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்துள்ளதாகவும், ஆதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பிறகு இது மேலும் மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

சிறுசிறு வியாபாரிகளால், மாட்டிறைச்சி கடைகளுக்கும், மார்கெட்டுகளுக்கும் கொண்டு போய் விற்கவும் முடியாத அளவுக்கு பீதி, கலக்கம் ஏற்பட்டுள்ளன. தற்போதும் ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. பசுவை அடித்து கொன்று விட்டதாக சொல்லி, 2 பேரை அடித்து கொன்றுள்ளது ஒரு கொடூர கும்பல். 2 பேருமே பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 2 பேரை, 20 பேர் கொண்ட கும்பல் இழுத்துவந்து தாக்கி உள்ளது. இதனால் நிலைகுலைந்து போய்விட்டனர் 2 பேரும்.

ஈவிரக்கமே இல்லாமல் அந்தகும்பல் செய்த இந்த காரியத்தினால், 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. ஆனால், வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இப்போது இது கொலை கேஸ் ஆகி உள்ளது. சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையிட்டபோது, 12 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்..

அதுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கும் பஜ்ரங் தள அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜூன் சிங் ககோடியா நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த வழக்கை, உயர்மட்ட விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் மேலும் அதிர்ச்சியையும், பாஜக அரசின் மீதான அதிருப்தியையும் மேலும் ஏற்படுத்தி வருகிறது.