ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டம், மராட்டியத்தில் பதற்றம்!

மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது.

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் உறவினரும், நவநிர்மாண் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அரசு அகற்றாவிட்டால், 4-ந்தேதி (நேற்று) முதல் ஏற்படும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பு அல்ல என்றும் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜ் தாக்கரே தனது கட்சி தொண்டர்களுக்கு வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதினார். அதில், எங்காவது மசூதிகளில் ஒலிபெருக்கி ஒலிப்பதை கேட்டால், அங்கு அனுமன் பாடல்களை 2 மடங்கு சத்தத்துடன் ஒலிபரப்ப வேண்டும். அப்போது தான் அவர்கள் நமது நிலைமையை புரிந்துகொள்வார்கள் என கூறியிருந்தார். இதனால் மராட்டியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக, மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக மசூதிகளுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.

இத்தகைய பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும், ராஜ் தாக்கரேவின் அறிவுத்தலின்பேரில், அவரது கட்சியினர் சிலர் மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதை எதிர்த்து, அதன் அருகே ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்கசெய்யும் வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுதொடர்பாக நவநிர்மாண் சேனா கட்சியினர் பலரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ராஜ் தாக்கரே பேசும்போது சொன்னதாவது:

எங்கள் தொண்டர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ரிப்போர்ட் எனக்கு கிடைத்துவிட்டது. நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்தனர். நாங்கள் அமைதியாக இருக்கவே விரும்புகிறோம்… ஆனால், இன்னைக்கு சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல்களை மீறிய அந்த 135 மசூதிகள் மீது மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எங்கள் தொண்டர்கள் மீது மட்டுமே ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள்? மசூதிகளில் ஆசான் ஒலித்தால், ஒலி பெருக்கி மூலம் ஹனுமன் கீா்த்தனைகளை இந்துக்கள் இசைக்க வேண்டும்.

மசூதிகளில் மட்டுமல்ல, பல கோயில்களிலும் சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகள் இயக்கப்படுகின்றன. இந்த இயக்கம் சட்டவிரோத ஒலி பெருக்கிகளுக்கு எதிரானது. இதை எப்படி மதப் பிரச்சினை என்கிறார்கள்? மசூதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோத ஒலி பெருக்கிகளும் அகற்றப்பட வேண்டும்.. அதுவரை நாங்கள் எங்கள் போராட்டங்களை தொடருவோம். அதுவரை ஆசான் நேரத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமன் கீர்த்தனைகளை இசைப்போம். என்று கூறினார்.