இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம்!

திபெத் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக, இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 மே மாதம் லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை, இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து சிக்கிம், அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதிகளில், இந்தி மொழிபெயர்ப்பாளர்களை பணிக்கு அமர்த்த சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியா – திபெத் எல்லையோர நிலவரங்களை சுலபமாக அறியவும், உளவு பார்க்கவும் இந்தி மொழி தெரிந்தவர்கள் சீன ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பணியாற்றுவர்.இதற்காக, திபெத்தைச் சேர்ந்த இந்தி மொழி பேசுவோரை சீனா தேர்வு செய்து, இந்திய எல்லை அருகே உள்ள முகாம்களில் பணியமர்த்தி வருகிறது.

சிக்கிம் அருகே சும்பி பள்ளத்தாக்கில், திபெத்தைச் சேர்ந்த 1,500 பேரை சீன ராணுவம் தேர்வு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பயிற்சி அளித்து வருகிறது. இது தவிர, மேலும் 400 பேரை தேர்வு செய்துள்ள சீனா, லாசா பகுதியில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.