பிரசாந்த் கிஷோருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: நிதிஷ் குமார்

பிரசாந்த் கிஷோர் கருத்தை பெரிதாக்க வேண்டாம்; அவரது கருத்து முக்கியம் அல்ல என, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் திட்ட வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதே, காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “காங்கிரசுக்கு என்னை விட, கட்சித் தலைமையே முக்கியம்” எனக் கூறி, காங்கிரசின் பேச்சுவார்த்தையில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், வரும் அக்டோபர் 2 முதல் மேற்கு சம்பாரண், காந்தி ஆசிரமத்தில் தொடங்கி கிட்டத்தட்ட பீகாரில் 3,000 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு, முடிந்தவரை மக்கள் அனைவரையும் சந்திக்க உள்ளேன். பீகாரில் இனி வருங்காலத்தில் தேர்தல் இல்லை என்பதால், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், பொது நல்லாட்சி என்ற திட்டத்துடன் மக்களைச் சென்றடைய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில், பிரசாந்த் கிஷோர் கருத்து தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்:

பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவரின் (பிரசாந்த் கிஷோர்) கருத்து முக்கியமில்லை. உண்மை தான் முக்கியம். எங்களது பணி குறித்து மக்களுக்குத் தெரியும். பீகார் மாநிலத்தில் என்னென்ன நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். பீகார் வளர்ச்சிப் பணிகள் குறித்து உங்களுக்குத் (பத்திரிகையாளர்கள்) தெரியும் என்பதால், நீங்களே பதில் சொல்லலாம். உண்மை நிலவரம் அறியாமல் கருத்து சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.