மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் 4-ம் தேதி மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், நீங்கள் குஜராத்திற்கு சென்றுள்ளீர்கள். குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் எதேனும் தவறு செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படலாம். ஆனால், நீங்கள் மேற்குவங்காளத்திற்கு சென்றீர்களானால் நீங்கள் கொல்லப்படலாம். நீங்கள் அங்கு செல்லாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது’ என்றார்.
இதற்கிடையில், உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்காளம் சென்றுள்ளார். மேற்குவங்காளத்தில் மம்தா தலைமையிலான அரசு 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பின் அமித்ஷா அம்மாநிலம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்த கருத்து மற்றும் அவரின் மேற்குவங்காள வருகை குறித்து மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்குவங்காளத்தில் தொடர்ந்து 11-வது ஆண்டாக ஆட்சியில் இருப்பதை கொண்டாடும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:-
அனைவரையும் பழிகூறுவது சரியல்ல. 11 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலத்தில் 5 சம்பவங்கள் நடைபெற்றால் அந்த 5 சம்பவங்களுக்கும் நீங்கள் கண்டனம் தெரிவித்து அதில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க கோரினால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால், அனைவரையும் குற்றஞ்சாட்டுவது சரியல்ல. மேற்குவங்காள செல்லாதீர்கள் நீங்கள் கொல்லப்படலாம் என யாரேனும் கூறுவது என்னை காயப்படுத்துகிறது. மற்ற மாநிலங்களை விட மேற்குவங்காளம் சிறந்த மாநிலமாகும். உத்தரபிரதேசத்தில் இன்று ஒரு பெண் நியாயம் கிடைவேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். ஆனால், மேற்குவங்காளத்தில் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் எனது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நான் விடமாட்டேன்.
குடியுரிமை திருத்தசட்டம் குறித்து அவர்கள் (பாஜக) பேசுகின்றனர். பிரதமர், முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுத்தது இந்த நாட்டின் குடிமக்கள் கிடையாதா. சிஏஏ-வில் குறைபாடுகள் உள்ளன. இந்த மசோதாவை அவர்கள் (பாஜக) ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்? குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமைதான் நம் வலிமை.
2024-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என எதுவும் அமல்படுத்தப்படாது. அமித்ஷா தலைமறைவாகிவிடுவார். மேற்குவங்காளத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. உத்தரபிரதேசத்தை பாருங்கள். அங்கு சட்டம் – ஒழுங்கை பார்ப்பது உள்துறை மந்திரியின் வேலை தானே. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை புல்டோசர் கொண்டு உடைக்க முயற்சிக்காதீர்கள், நெருப்புடன் விளையாட வேண்டாம். சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் கூட்டாளிகள், அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள், சமூகங்களைப் பிரிக்க விரும்புகிறார்கள். நாட்டின் உள்துறை அமைச்சர் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறார், மேலும் அவர் டெல்லி பலத்தை வங்காளத்தில் காட்ட முயல்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பணியை மட்டும் கவனிக்க வேண்டும். BSFஇன் வேலையில் தலையிட வேண்டாம். மத்திய உள்துறை அமைச்சராக உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் என்ன செய்வது என்று எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டாம். மாநிலத்தை ஆட்சி செய்ய BSF-ஐக் கேட்காதீர்கள். நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசத்தின் எல்லைகளைக் காப்பது உங்கள் வேலை. மாடு கடத்தல் மற்றும் ஊடுருவலை நிறுத்துங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.