விக்னேஷ் மரண விசாரணை: அதிமுக வெளிநடப்பு!

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

இன்று, தமிழக சட்டப்பேரவையில், ஈரோடு உப்பிலிபாளையத்தில் முதியவர்கள் படுகொலை, விக்னேஷ் லாக்கப் மரணம் குறித்து,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு உப்பிலிபாளையத்தில் முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இது போன்று இனிமேலும் நடக்காதவாறு தனிமையில் வாழும் முதியோர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் விக்னேஷ் லாக்கப் மரணத்தின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விக்னேஷ் லாக்கப் மரணம் குறித்து வழக்கு பதியப்பட்ட நிலையில், உடற்கூறாய்வில் 13 இடங்களில் காயம் இருந்த காரணத்தால் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதியவர்கள் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

வெளிநடப்புக்குப் பிறகு கோட்டை வளாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

விக்னேஷ் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை நடத்தினால், நேர்மையாக நியாயமாக இருக்கும். இந்த மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளாக பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது. இது ஆன்மிக நிகழ்ச்சி. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் விவகாரம் அங்கே தங்கியிருந்து பல்லக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. இதற்கு தடை செய்ய அதிகாரம் இல்லை. ஆனால், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்கதக்கது.

ஆன்மிகத்தில் அரசு தலையிடுவதை ஏற்று கொள்ள முடியாது. தீபாவளி வாழ்த்து முதல்வர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும், மதத்தையும் சாராதவர். பல்வேறு மதங்களை சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. முதல்வர் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். மக்களின் விருப்பமும் கூட.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ரவுடிகள் சுற்றுலா செல்வது போல உலா வருகின்றனர். போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவு விற்பனையாகின்றன. கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திறமையற்ற அரசு என ஓராண்டில் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.