சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பூபேஷ் பாகேல் முதல்வராக செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு முன்கூட்டியே காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. சமீீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது எதிரொலித்தது. இதன் ஒருபகுதியாக சட்டசபை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகள் கேட்கும் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல்வர் பூபேஷ் பாகேல் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான ராஜ்பூரில் மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விமானம் அல்லது ஹெலிகாப்டரில் வானில் பறக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. நான் ஹெலிகாப்டரில் வரும்போதே ஏராளமான குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்க்கின்றனர். தரையில் நின்று விமானம், ஹெலிகாப்டரை உயர்ந்து பார்த்த மாணவர்களும் அதில் பயணிக்க வேண்டும். அதன்படி மாணவர்கள் அரசு செலவில் பயணிக்க வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டரில் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்படும். இவர்கள் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்வார்கள்.
இத்திட்டம் மூலம் மாணவர்களும் படிப்பு மீதான தங்கள் கவனத்தை அதிகப்படுத்துவார்கள். நம் மாநிலத்தில் பயிலும் மாணவர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன. பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது நான் உணர்ந்துள்ளேன். இதனை வெளிக்கொண்டு வர அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் சாதனைகளை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.