7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தரவேண்டும் என, சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவு எடுக்க தவறினால் அரசியலமைப்பு சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு உத்தரவிடுவோம்’, என சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது பெரும் நம்பிக்கையை தருகிறது. நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு தடுக்கப்பட்ட அவரது விடுதலை இன்றைக்கு சாத்தியப்பட இருப்பது அளப்பெரும் மனமகிழ்வை தருகிறது.
அரசியலமைப்பு சாசனத்தை துளியளவும் மதிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தை கேலிப்பொருளாக்கி, ஜனநாயகத்தை படுகொலை செய்து வந்த மத்திய பா.ஜ.க. அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக கவர்னரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கூற்றை பார்க்கிறேன். ஆகவே, இனியும் தாமதிக்காது, 161-வது சட்டப்பிரிவின்படி 7 பேர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என கவர்னரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குவது, அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் தூக்கினார்கள். தற்போது மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மனிதனை, மனிதன் சுமப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை தமிழர்களுக்கு உதவ நாம் தமிழர் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை திரட்டிக் கொண்டு இருக்கிறோம். அதை முறைப்படி கொண்டுபோய் சேர்ப்போம். தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது இலங்கை தமிழர்களுக்கு போய் சேரும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.