தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா மற்றும் ஏராளமான பொதுநலன் அமைப்புகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம். சமீபத்தில் அனுமன் மந்திரத்தை பொது இடத்தில் பாடுவோம் என கூறியதற்கு, சிலர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டம் சரியானதுதான். அதனை செயல்படுத்தும் விதத்தில் தான் தவறு நடக்கிறது. அதற்காக ஒட்டு மொத்த சட்டத்தையே ரத்து செய்ய முடியாது’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் வரவேண்டி உள்ளதால் தான் ஒரு வாரம் அவகாசம் தற்போது கேட்கிறோம்’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதி பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.