பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்கள், மனித உரிமை இயக்கம், அரசியல் இயக்கம் என பல முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிந்து இயங்கி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரோடோ மித்ரா எழுதிய ‘THE LURKING HYDRA’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுகிறவர்கள் பயங்கரவாதிகள். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கம் மிகவும் ஆபத்தானது. மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம். சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் யுத்தம் நடத்தவும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடவும் ஆட்களை அனுப்புகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா. இதனை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் தவறு; ஆபத்தானது. நாட்டுக்கு அச்சுறுத்தலானது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக தலைவர் முஹம்மது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கம் என்பது நாடு முழுவதும் மனித உரிமைகளுக்காக போராடும் இயக்கம். நாடு முழுவதும் நாங்கள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறோம். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். கொரோனா தொற்று காலங்களில் மக்களுக்கான சேவை பணிகளில் முன் நின்றவர்கள் நாங்கள். மக்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்ட போது நாங்கள் ஆற்றிய களப்பணி சிறப்பானது. அப்படிப்பட்ட எங்கள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என சேற்றைவாரி, அவதூறை வீசி எறிந்துள்ளார் ஆளுநர். அவரது இந்த பேச்சு மிகவும் மோசமானது. மிகவும் கண்டிக்கத்தது.

நாகாலாந்தில் ஆளுநராக பதவி வகித்த போது அந்த மக்களுக்கு துரோகம் இழைத்தவர் ஆர்.என்.ரவி. நாகாலாந்து மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவர்தான் இவர். ஆளுநர் பதவியில் இருந்து விலகும் போது நடந்த பிரிவு உபசார நிகழ்வுக்கு நாகாலாந்தை சேர்ந்த எவருமே பங்கேற்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் குரலாக வன்மத்துடன் அரசியல் நோக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது அவதூறை வீசியிருக்கிறார்.

தமிழக ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக மக்களின் உணர்வை தொடர்ந்து புண்படுத்தி வருகிறவர் ஆர்.என்.ரவி. தமிழக அரசின் 18 சட்டமுன்வடிவுகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கடுமையான குட்டு வாங்கியிருப்பவர். தமிழக அரசு தமது ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில் உள்நோக்கத்துடன் மடைமாற்றம் செய்யும் வகையில் இத்தகைய கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு முஹம்மது சேக் அன்சாரி தெரிவித்துள்ளார்.