அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சான்றிதழ்களுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, தரம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணத்தை ரூ.300-ல் இருந்து ரூ.3,000 ஆக அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. அதோடு பட்டம் பெற்ற சான்றிதழ் தொலைந்துவிட்டால், புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும். இந்த புதிய கட்டண உயர்வு, இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. மேலும், 23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.