ராஜஸ்தானில் கலவரங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்போம் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.
ஈத் பண்டிகையன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் கரோலியில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக அம்மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்து இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் கரோலியில் ஈத் பண்டிகையன்று மசூதிகளில் இருந்த ஒலி பெருக்கிகளை இந்துத்துவ அமைப்பினர் அகற்ற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மோதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பாலிவுட் நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை கங்கனா ரனாவத் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அப்போது, “அவர்களால் இதுபோன்ற சூழலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நாம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம். ராஜஸ்தானில் ஏற்பட்டு இருக்கும் கலவரங்கள் காரணமாக உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. யாரால் வன்முறையை தடுக்க முடியுமோ அந்த அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சிறுபான்மையினர், தலித்துகளின் வீடுகளை அம்மாநில அரசு புல்டோசர்களை கொண்டு இடித்து வந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ராம நவமி ஊர்வலத்தின்போது கலவரங்கள் வெடித்தன. இதில் மத்திய பிரதேசத்தில் கலவரம் ஏற்பட்ட கார்கோன் பகுதியில் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு அம்மாநில பாஜக அரசு இடித்தது. இதேபோல் டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போதும் கலவரம் வெடித்ததில் பலர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அங்குள்ள இஸ்லாமிய வீடுகளும் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜஸ்தானில் புல்டோசர்களை கொண்டு வர வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்து இருப்பது கவனிக்கத்தக்கது.