பா.ம.க. சார்பில் மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவித்துள்ளார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ம.க.வின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றதை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். ஆயிஷா போன்றவர்களின் உணர்வு பாராட்டத்தக்கது; ஆனால் போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல.
பா.ம.க. பொது நலனுக்காக எதையும் செய்ய துணிந்த தொண்டர்கள் நிறைந்த இயக்கம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அத்தகைய தொண்டர்கள் பா.ம.க.வுக்கு மிகவும் தேவையானவர்கள்; தீக்குளிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி தீரம் மிக்க தொண்டர்களை இழக்க விரும்பவில்லை. அதனால், பா.ம.க.வின் தொண்டர்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
பா.ம.க.வின் முதன்மை நோக்கங்களில் ஒன்று ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் டாக்டர் ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். பா.ம.க. தொடங்கப்படுவதற்கு முன்பாக 1984-ம் ஆண்டிலேயே மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் நடத்தினார்.
1989-ம் ஆண்டு பா.ம.க.வின் தொடக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். பா.ம.க. தொடங்கப்பட்ட பிறகு 1.11.1989 அன்று நடத்தப்பட்ட முதல் போராட்டமே மதுவிலக்கு கோரும் அறப்போராட்டம் தான். அதன்பின்னர் மதுவிலக்கை வலியுறுத்தி மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம், ஒப்பாரி போராட்டம், முற்றுகை போராட்டம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போராட்டங்களை பா.ம.க. நடத்தி உள்ளது. மற்றொருபுறம் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளை மூட வைத்தது.
தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதற்கும், மது வணிக நேரம் குறைக்கப்பட்டிருப்பதற்கும் பா.ம.க. நடத்திய அரசியல், சட்டப் போராட்டங்களே காரணம். மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தலையாய பணியாகும். மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ம.க. அறிவிக்க உள்ளது. மதுவை ஒழித்து, மக்களை காக்க எந்த தியாகத்துக்கும் பா.ம.க. தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. இதில் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:
சிதம்பரத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆறுகளில் தடுப்பணை கட்டினால்தான் கடல் நீர் உள்ளே புகாமல் இருக்கும். மாவட்டத்தில் உள்ள முக்கியமான 5 ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். வெப்பநிலை தடுப்பு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
என்எல்சிக்காக மீண்டும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப் போவதாக என்எல்சி நிறுவனம் கூறுகிறது. அதை எடுக்க விட மாட்டோம். நீட் தேர்வால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட்தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. அதனால் கிராமப்புற மாணவர்கள் படிக்க முடியவில்லை. நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி அதில் விரைவில் கையெழுத்திட வேண்டும். நீட் தேர்வால் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி பணத்தை நீட் சென்டர்கள் கொள்ளை அடிக்கின்றன. அதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக ஆளுநர் மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவருக்கு நிர்வாகம் தெரியும். அவர் தமிழக அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.