தமிழ்நாட்டில் கால் ஊண்ற பாஜக எத்தனையோ வகைகளில் முயன்று வருகிறது. கட்சியை பலப்படுத்த செல்வாக்கான பிற கட்சி பிரமுகர்களை இழுத்துவருவது பாஜக பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டம். தமிழ்நாட்டிலும் இந்த முறையை செயல்படுத்தி கணிசமான நபர்களை பாஜகவுக்கு கொண்டு வந்துள்ளது. பாஜகவின் துணைத் தலைவர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தாலே இது விளங்கும்.
எல்.முருகன் தலைவராக இருந்த போது திமுக அதிமுகவிலிருந்து முக்கிய நபர்கள் பாஜகவை நோக்கி வந்தனர். அண்ணாமலை தலைவரான பின்பு பெரிய தலைகள் ஏதும் வரவில்லையே என்ற முணுமுணுப்பு கட்சிக்குள் இருந்தது. ஆனால் அண்ணாமலையும் சத்தமில்லாமல் மாற்று கட்சியினரை கடத்திவர ஸ்கெட்ச் போட்டபடியே உள்ளார். அப்படியான ஒரு திட்டத்தை அண்டர் கிரவுண்டில் செயல்படுத்தி இப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யாவை பாஜகவுக்கு அழைத்து வர உள்ளார்.
திமுகவின் முன்னணி தலைவர்களில் கொள்கை ரீதியாக களமாடுபவர்களில் முக்கியமானவர் திருச்சி சிவா. அவரது மகனையே தங்கள் கட்சிக்கு கொண்டு வந்தால் பல விஷயங்களில் திமுகவுக்கு தண்ணி காட்டலாம் என அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார். அந்த திட்டம் விரைவில் நிறைவேறப்போகிறது என்பது தான் டெல்லியிலிருந்து வந்த ஹாட் தகவல். விரைவில் அண்ணாமலை தலைமையில் சூர்யா பாஜகவில் இணைவார் என அடிச்சுச் சொல்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.
திமுக வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தோம். கட்சியில் இணையப்போகிறாரா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் சில காலமாகவே திருச்சி சிவாவுக்கும் அவரது மகன் சூர்யாவுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. திமுகவில் தனக்கு முக்கிய பதவியை பெற்றுத்தர தந்தையிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தார் சூர்யா. ஆனால் அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற கோபம் சூர்யாவுக்கு இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
அதோடு மற்றொரு விஷயத்தையும் கூறினர். திருச்சி சிவாவே கட்சி தலைமை மீது அதிருப்தியில் தான் இருக்கிறார். கட்சிக்காக இத்தனை ஆண்டுகாலம் உழைக்கிறோம், ஆனால் தமக்கு உரிய அங்கீகாரமோ, பெரிய பதவியோ தரவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. அவர் அளவுக்கு அனுபவம் உள்ளவர்களுக்கும், புதிதாக வந்தவர்களுக்கும் ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவம் தனக்கு இல்லையே என்றும் நினைக்கிறாராம்.
ஆனால் கொள்கையில் உறுதிகொண்ட திருச்சி சிவாவுக்கும் அவரது மகன் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூடுதல் தகவலையும் கூறினர்.