கியூபாவில் ஹோட்டலில் நடந்த வெடி விபத்து: 22 பேர் பலி!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஹோட்டலில் நடந்த பெரும் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 74 பேர் படுகாயமடைந்தனர்.

ஹோட்டலில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் 22 பேர் பலியானதாக அதிபர் மிகுவல் டியஸ் கானல் தெரிவித்துள்ளார். சரடோகா என்ற ஹோட்டலில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் தீவிரவாத தொடர்புகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் ஏற்பட்ட இந்த பெரும் விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியே தூசி மண்டலமாக காட்சி அளித்தது. வெடிவிபத்து நடந்த இடம் பெரும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிபர் மிகுவல் கூறுகையில், இது வெடிகுண்டு சம்பவம் அல்ல. காஸ் லீக்தான் காரணம். இதில் தீவிரவாத தொடர்புகள் ஏதும் கிடையாது. மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஹோட்டல் தற்போது மூடப்பட்டுள்ளது. பணியாளர்கள் பலர் உள்ளேயேதான் உள்ளனர். எத்தனை பேர் பலியானார்கள் என்ற சரியான விவரம் விரைவில்தெரிய வரும் என்றார்.

இந்த வெடி விபத்தின் காரணமாக ஹோட்டல் வெளிப்புற சுற்றுச்சுவர் பெரும் சேதமடைந்துள்ளது. அதேபோல காஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து நடந்த பகுதியும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. உட்புற அறைகள் பலவும் கூட சேதமடைந்துள்ளன.

இந்த ஹோட்டலில் மொத்தம் 96 அறைகள் உள்ளன. சில காலமாக இது மூடியே கிடந்தது. அதை சரி செய்து, சுத்தமா்கி மீண்டும் திறக்க முடிவு செய்து பணிகள் நடந்து வந்தன. இந்த சமயத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது.

கொரோனா காரணமாக கியூபாவில் சுற்றுலாப் பயணிகள் வருகை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போதுதான் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். இதனால் மூடிக் கிடக்கும் ஹோட்டல்களை திறக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில்தான் இப்படி ஒரு வெடி விபத்து நடந்துள்ளது. கியூபா பொருளாதாரத்தில் சுற்றுலா மிக முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.